மூணாறு, நவ.14: மூணாறு அருகே உள்ள மறையூரில் நாய்க்குட்டிகளை திருடிய வழக்கில் நான்கு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், கேரள மாநிலம் மூணாறு அருகே மறையூர் சகாயகிரி பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டின் அருகே நாய் கூண்டில் இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டிகளை திருடிய மர்மநபர்களைப் பிடித்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (35), திண்டுக்கல் செம்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (23), மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் (23), சிவகங்கை திருப்பத்தூர் சிரவயல் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (42) ஆகியோர் என தெரிய வந்தது.
இதனையடுத்து நால்வரையும் மறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேவிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் எஸ்.பிஜூகுமார் ஆஜரானார். வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதி அருண் மைக்கேல் தீர்ப்பளித்தார். அதில் நால்வருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.