திருப்புத்தூர், ஜூலை 7: திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வாணியன்கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கடந்த இரண்டு நாட்களாக 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. இதில் வாணியன்கோயிலைச் சேர்ந்த சிறுவர், சிறுமி, மூர்த்தி (24), பெரியார் நகரைச் சேர்ந்த அன்னலெட்சுமி (34), பொன்னழகு(40), காசி விஸ்வநாதன்(69), காட்டாம்பூரைச் சேர்ந்த நாகப்பன்(36) உள்ளிட்ட 3 வயது குழந்தை முதல் 69 வயது முதியவர் உள்பட காயம் அடைந்தனர்.
நாய் கடியால் பாதிப்புக்கு ஆளானவர்கள் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்புத்தூரில் உள்ள பல தெருக்களில் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நாய்களுக்கு அவ்வப்போது வெறி பிடித்து சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடித்து குதறி வருகிறது. இந்நிலையில் மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிகளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.