நாமக்கல், ஆக.12: நகராட்சியின் கடைசி ஆணையாளர் விடைபெற்ற நிலையில், 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, இன்று நாமக்கல் நகராட்சி உதயமாகிறது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சியுடன் புதிதாக வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. நாமக்கல் மாநாகராட்சி ஆணையாளராக தஞ்சாவூரில் பணியாற்றி வரும் மகேஸ்வரியை நியமித்து கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நாமக்கல் நகராட்சி இன்று(12ம் தேதி) முதல் மாநகராட்சியாக செயல்பட தொடங்குகிறது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வழங்குகிறார். அதனை பெற்றுக்கொள்ள, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் சென்னை சென்றுள்ளனர்.
நாமக்கல் நகராட்சியில் தற்போது 39 வார்டுகள் உள்ளன. 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் வார்டுகளின் எண்ணிக்கை 50 முதல் 55 ஆக உயரும். பேரூராட்சியாக இருந்த நாமக்கல் கடந்த 1974ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2021 இறுதியில் நாமக்கல் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் தற்போது 2 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மாநகராட்சி பகுதியாக மாறியுள்ளதால், இங்குள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 3 லட்சமாகும்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நாமக்கல் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சென்னுகிருஷ்ணன் ஆவடி மாநகராட்சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இதையொட்டி, சென்னுகிருஷ்ணனுக்கு பிரிவுபசார விழா நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்து பேசினார். நிகழ்ச்சியில், பங்கேற்ற கவுன்சிலர்கள், நாமக்கல் நகராட்சி ஆணையளார் சென்னுகிருஷ்ணனின் சிறப்பான பணியை நினைவுகூர்ந்து பாராட்டி பேசினார்கள். இதைத்தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் சண்முகம், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.