நாமக்கல் ஆக.20: நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் பணி புரிய, நேரடி நியமனத் தேர்வில் கால்நடை மருத்துவர்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), தற்போது 516 பிரதம சங்கங்களின் மூலம், தினமும் சராசரியாக 1.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு, முறையாக பணம் பட்டுவாடா செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு தற்போது, பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறவும், முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.
அதன் அடிப்படையில், கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று, தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன், காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் தற்காலிக பணியிடத்திற்கு 12 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (வயது வரம்பு – 50 வயதிற்குள்), தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு, நாமக்கல்-பரமத்தி ரோட்டில் உள்ள ஆவின் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.