நாமக்கல், ஏப்.21: நாமக்கல் பகுதியில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 109.4 டிகிரி, குறைந்தபட்சம் 73.4 டிகிரியாக இருக்கும்.
காற்று மணிக்கு 4 கி.மீ., வேகத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும், அதிகபட்சமாக 70 சதவீதமாகவும் இருக்கும். கோடை காலங்களில் கறவை மாடுகள் அதிக வெப்பநிலை காரணமாக அயற்சிக்கு ஆளாகின்றன. அதிக வெப்பம் காரணமாக கறவை மாடுகளின் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால், விற்பனை செய்யப்படும் பாலுக்கு விலை குறைவாக கிடைக்கும்.
இதை தவிர்க்க வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய விடக்கூடாது. குளிர்ந்த நேரங்களில் கறவை மாடுகளுக்கு போதுமான அளவு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். தரமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும். வெப்பம் குறைவாக உள்ள அதிகாலையில் கறவை மாடுகள் மற்றும் எருமைகளில் சினை பருவ அறிகுறிகளை கவனித்து ஊசி போட வேண்டும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.