நாமக்கல், ஆக.17: நாமக்கல் மாவட்டத்தில் கைத்தறி துறை இயக்குநர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். மேலும், அரசு நூல் கிடங்கினை பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கைத்தறி துறை இயக்குநர் சண்முகசுந்தரம் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, வெப்படை அருகே பாதரையில் செயல்பட்டு வரும் கைத்தறி துறை அரசு நூல் கிடங்கினை, கலெக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பராமரிக்கப்பட்டு இருப்பு பதிவேடு, நூல் வரப்பெற்ற பதிவேடு மற்றும் ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அரசு நூல் கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு கிடங்கிற்கு பெறப்படும் நூல் மற்றும் சங்கங்களுக்கு நூல் விநியோகிக்கப்படும் விபரங்களை விரிவாக கேட்டறிந்தார். மேலும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985ன் கீழ் உள்ள கைத்தறி ரகங்கள் ஒதுக்கீடு தொடர்பான விபரங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து திருச்செங்கோடு வட்டம், அனிமூர் ஆதிசிவன் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், நெசவாளர் காலனி அர்த்தநாரீஸ்வரர் சைசிங் மில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது, சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, தறிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, கைத்தறி துறை உதவி இயக்குநர்கள் பழனிகுமார், ஜெயவேல் கணேசன் மற்றும் கைத்தறி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.