திருப்பூர், அக்.23: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் பவானி ஆற்றில் பொதுப்பணித்துறை மூலம், திருப்பூர் மாநகராட்சியின் 4வது குடிநீர் திட்டம் நீரேற்று நிலையத்திற்கு ரூ.24.54 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் 4ம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மேட்டுப்பாளையம் – வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சாமண்ணா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம், கோவை, தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று காலை மேட்டுப்பாளையம் வருகை தந்து மேற்கண்ட பணிகள் நடைபெறு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். தலைமைச்செயலாளர் ஆய்வின் போது கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவண்குமார்,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.