பந்தலூர், நவ.1: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள், அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2023-24-ம் கல்வி ஆண்டின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பந்தலூர் அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் கணேசன் மற்றும் நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், சாந்தி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை பிரீத்தா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நந்தகோபால் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து பேசினார்.
ஆறு நாட்கள் நடைபெறும் முகாமில் பள்ளி வளாகத்தை சுற்றி முற்புதர்களை அகற்றி சுத்தம் செய்வது மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இந்த முகாமில் பள்ளி ஆசிரியர்கள் தண்டபாணி, ஹம்சா, சிவாப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.