சின்னசேலம், ஜூலை 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் நீரை தேக்கி நாட்டார்மங்கலம், தென் செருவள்ளூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஏரியில் கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக அதிக நீர் தேங்கி இருந்தது. இதனால் நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்தனர். இந்நிலையில் ஏரியில் நீர் வற்றியது. மேலும் இந்த ஏரியில் கெண்டை, விரால், கெளுத்தி, சிலேபி உள்ளிட்ட மீன்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு மேல் இந்த ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
அப்போது நாட்டார் மங்கலத்தை சுற்றியுள்ள ஈசாந்தை, சிறுவத்தூர், தென்சிறுவள்ளூர், உலகியநல்லூர், புக்கிராவரி ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மீன்பிடிக்கும் வலையுடன் வந்து மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். இதில் சுமார் 2 டன் எடைக்கு மேல் மீன்கள் கிடைத்தது.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அனைவரும் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 5 கிலோவுக்கு மேல் மீன்பிடித்து வந்து சமைத்து உண்டனர். தற்போது கோடை காலம் என்பதால் இந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளிலும் மீன்பிடி திருவிழா தொடர்ந்து நடைபெறும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் அருகே உள்ள காரனூர் கிராமத்தில் உள்ள ஏரியிலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் காரனூர், குடிகாடு, உலகங்காத்தான், குதிரைசந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்தனர். சுமார் 2 டன் அளவுக்கு மீன்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.