பாடாலூர், ஆக. 21: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரதராஜ கம்ப பெருமாள் சுவாமி திருவீதியுலா நேற்றுமுன்தினம் நடந்தது.
ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் வரதராஜ கம்ப பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இந்தாண்டு ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு குருக்கள் மந்திரம் சொல்ல குறிப்பிட்ட சமூகத்தினர் பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொண்டனர்.இதையொட்டி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து இரவு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட நாக வாகனத்தில் பெருமாள் சுவாமி வீதியுலா நடந்தது. கோயில் முன்பு தொடங்கிய வீதியுலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு சுவாமிக்கு தேங்காய், பழம், பூக்கள் கொடுத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சுவாமி ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.