பாடாலூர், ஜூன் 19: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் மழை வேண்டி செங்கமலையார் கோயிலில் கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார்மங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள செங்கமலையார் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று, தொடர்ந்து மழை பெய்ய வேண்டி கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் நாட்டார்மங்கலம் வடக்கி மலை அடிவார காட்டுப்பகுதியில் உள்ள செங்கமலையார் சுவாமி கோயிலுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தும், சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.