சிவகங்கை, ஜூன் 3: நாட்டரசன்கோட்டை கோயில் தெப்பக்குளத்தில் இருந்த நீரை, முழுமையாக வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு, குடிநீர் தெப்பக்குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய இக்குளம், பெரும்பாலும் கோடை காலத்திலும் வற்றுவதில்லை.
தற்போது கடுமையாக வெயில் அடிக்கும நிலையிலும், குளத்தில் ஓரளவு நீர் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குளத்தின் நடுவே உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதையடுத்து சிவகங்கை தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்து கிடந்தவர் காளையார்கோவில் அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்த செல்வகணேசன் என்பது தெரியவந்தது.
இவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் குளம் அசுத்தமானதையொட்டி உடனடியாக கிணறு மற்றும் குளத்தில் இருந்த நீரை மொத்தமாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைகள் இன்று (ஜூன் 3) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து குளத்தை சுத்தம் செய்யப்படும் பணிகளும் நடைபெற உள்ளது.