திருச்சி, ஆக.26: திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: திருச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் தெரிவித்தனர். அப்போது மழைகாலம் என்பதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்கிற முனைப்பில் பணிகள் நடைபெறுகிறது. திருச்சியில் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும், திருச்சி மாநகரின் அரைவட்ட சுற்றுச்சாலை அமைப்பதற்கு ஒன்றரை மாதத்தில் ஒப்பந்தம் கோரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். அந்த பேருந்து நிலையங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாது. அங்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கரும், 10 ஏக்கர் ஐ.டி பார்க் அமைக்கவும், 30 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும், காவல் நிலையத்திற்கு ஒன்றரை ஏக்கரும், மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கரும், தீயணைப்பு துறைக்கு ஒன்றரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. மீதம் 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ளது. வருங்காலத்தில் தேவைப்படும்போது அதை பயன்படுத்துவோம்.
காலை உணவுத்திட்டம் தொடங்கியபோது ஒரு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்போது விரிவுப்படுத்தப்பட்டு இன்று 11 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். நிதி நிலைமைக்கு ஏற்ப அது மேலும் விரிவுப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். லால்குடி எம்எல்ஏ ராஜினாமா கடிதம் கொடுத்ததாக பரவிய செய்தி வதந்தி. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கவுன்சிலர்கள் முத்துசெல்வம், ராமதாஸ், கவிதா செல்வம் மற்றும் மாநகராட்சி, அனைத்து துறை அதிகார்கள் உடனிருந்தனர்.