தஞ்சாவூர், ஜூன் 7: நாஞ்சிக்கோட்டை பகுதியில் மண்வளத்தை பெருக்க மாட்டுக்கிடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.காவிரி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள பொட்டுவாச்சாவடி, உச்சி மாஞ்சோலை, ரங்கநாதபுரம் கொல்லாங்கரை, கண்டிதம்பட்டு பஞ்சநதிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து விட்டு இயற்கை உரத்துக்கு மாறுவதால் மாட்டுக் கிடைகள் ஆட்டுக்கிடைகள் வயல்களில் அமைத்து மண்வளத்தை பெருக்கி வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி கோடை சாகுபடி அறுவடை பணிகள் முடிந்து முன்பட்ட குருவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் விவசாயிகள் வயல்களில் ஆட்டுக்கிடைகளை போடுவதற்காக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு மந்தைகளை கொண்டு வந்து காவிரி பாசனப்பகுதியில் உள்ள வயல்களில் கட்டி பணம் சம்பாதித்து வருகின்றனர். சிலர் உள்ளூர்களில் உள்ள மாடுகளை ஒன்று சேர்த்து அதை வயல்களில் கட்டி கிடைபோட்டு வருகின்றனர். இதன் பலன் அதிகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ரசாயன உரங்களின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதால் இயற்கை உரத்துக்கு மாறி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.