நாகர்கோவில், ஜூன் 11 : காவல்கிணறு – பார்வதிபுரம் நெடுஞ்சாலையில் நாகர்கோவில் அடுத்த நாக்கால் மடம் பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த சர்வீஸ் ரோடு வழியாக திருப்பதிசாரம் டோல்கேட் வந்து விட முடியும். நாக்கால்மடத்தில் சர்வீஸ் ரோடு திருப்பத்தில் பாசன கால்வாய் செல்கிறது. இதன் மேல் எந்த வித தடுப்பும் இல்லாததால், வாகனங்கள் தடுமாறி விழும் நிலை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர், தனது மனைவி சுயம்புகனி மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பதிசாரம் டோல்கேட் வழியாக நாகர்கோவில் வர இணைப்பு சாலையில் பைக்கை திருப்பி உள்ளார்.
அப்போது பைக் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 4 பேருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஏற்கனவே சாத்தான்குளத்தில் தடுப்புகள் இல்லாத கிணற்றில் விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின், சாலைகளில் கால்வாய்கள், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்புகள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே நாக்கால்மடம் சர்வீஸ் ரோடு பகுதியிலும் பாசன கால்வாய் மேல் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.