நாகப்பட்டினம்,செப்.30: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் குடும்பத்தினர் மனு அனுப்பும் போராட்டம் நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சாலைபணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதி பெற்ற 200க்கும் அதிகமானவர்களுக்கு பணிநியமனம் வழங்க கோரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு சாலைபணியாளர் பணியை கோட்ட பொறியாளர் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை, சலவைப்படி, நிரந்த பயணப்படி ஆகியவை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை தபால் மூலம் சென்னை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.