நாகப்பட்டினம், மே 21: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரிசி ஆலைகளை இயங்க விடாமல் தடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரிசி ஆலையை சார்ந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்ட அரிசி ஆலைகளை சார்ந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் சென்று, டிஆர்ஓ பவணந்தியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றோம்.
எங்களிடம் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதியை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் நெல் இயக்கத்தில் 90 சதவீதம் வரை அவர்களே மேற்கொள்கின்றனர். 10 சதவீதம் நெல் இயக்கத்தை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம். இந்நிலையில் அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் செய்து முடக்கி வருகின்றனர். அரிசி ஆலைகளை முடக்குவதால் 300க்கும் மேற்பட்ட எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.