நாகப்பட்டினம், ஜூன் 11: நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு நூலகம் நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் காணொளி காட்சி வாயிலாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என தமிழகம் முழுவதும் நேற்று 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிறப்பு நூலக திறக்கப்பட்டது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உடன் வரும் உறவினர்கள் ஓய்வு நேரங்களில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து பயன்பெறும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், ஆன்மீகம், பொதுஅறிவு மற்றும் வரலாற்று புத்தகங்கள் என 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், தினசரி நாளோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மாவட்ட நூலக அலுவலர் சுமதி, மாவட்ட மைய நூலகர் மீனாகுமாரி, துணை நிலைய நியமன அலுவலர் விஜயபூரணி, கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் மாவட்ட மைய நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.