நாகப்பட்டினம், ஜூன் 28: நாகூர் ஆண்டவர் தர்காவில் நாகூர் ஆண்டவர் அருள் வழங்கிய யாஹூசைன் பள்ளியில் மொஹரம் பண்டிகை நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் மொகரம் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகூர் ஆண்டவர் அருள் வழங்கிய இடமான பிரசித்தி பெற்ற யாஹூசைன் பள்ளிவாசலில் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹுசைன் சாகிப் தலைமையில் பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க நாகூர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக பாரம்பரிய வழக்கப்படி ஓராண்டுக்கு முன் யாஹூசைன் பள்ளிவாசலில் மண் பானையில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட சர்பத் எடுக்கப்பட்டு யாத்திரிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.