நாகர்கோவில், ஆக.12 : நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு பெண்கள் கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது. வடசேரி அருணாங்குளம் சந்திப்பில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. மாநகராட்சி மேயர் மகேஷ் கஞ்சி கலச ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலசம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா உள்ளிட்டோரும் கஞ்சி கலச ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக நேற்று காலை ஆதி பராசக்தி அம்மனுக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 108 மந்திரங்களுடன் சக்தி கவசம், சக்தி வழிபாடு நடைபெற்றது. கூட்டு தியானம் சக்தி பீட தலைவர் சின்னதம்பி தலைமையில் நடந்தது. நேற்று கோயிலில் அன்னதானமும் நடைபெற்றது.