நாகர்கோவில், ஆக.30: நாகர்கோவிலில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மனோஜ் (22). ஐடிஐ படித்து விட்டு, ஐஎஸ்ஆர்ஓவில் 2 ஆண்டுகள் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தார். தற்போது வெளிநாடு செல்வதற்கான ஏற்பாட்டில் இருந்தார். இவரது நண்பர், பேச்சி என்ற இசக்கிமுத்து (25). இவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆவார். இசக்கிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதை மனோஜ் கண்டித்துள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, அவ்வப்போது தகராறு நடந்து வந்தது. இந்த பிரச்னையால் சமீப காலமாக இசக்கிமுத்துவிடம், மனோஜ் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு, மனோஜ் தனது சகோதரர் ராஜகோபால் என்பவருடன் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிமுத்துவுக்கும், மனோஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். அப்போது இசக்கிமுத்து தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் மனோஜ் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த மனோஜை மீட்டு, வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மனோஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மனோஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மனோஜ் சகோதரர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர்.