நாகர்கோவில்,மே 26: நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் செயல்படும் நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஓராண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பபயிற்சி சேர்க்கை 15.05.2025 முதல் 20.06.2025 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி இரண்டு பருவங்களைக் கொண்டது. பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்புடன் 3 ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் www.tncu.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். கட்டணம் ரூ.100ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். நேரடியாக மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தமிழில் மட்டுமே நடைபெறும். இப்பயிற்சியில் சேரும் SC/ST, BC/MBC அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரில் அல்லது பதிவுஅஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக் கட்டணம் ரூ.20,750ஐ ஒரே தவணையில் இணையவழியில் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04652-278132 என்ற எண்ணில் அல்லது நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், கிறிஸ்டோபர் தெரு, நேசமணி நகரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.