நாகர்கோவில், ஆக. 24: நாகர்கோவில் வடக்கு கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (65). விவசாயி. இவர் இரண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த 20ம் தேதி ஒரு ஆட்டை காணவில்லை. இதன் மதிப்பு ₹10 ஆயிரம் ஆகும். பல இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்த போது காரில் வந்த இரு இளைஞர்கள் ஆட்டை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இது குறித்து மாடசாமி கோட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை நடக்கிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இது தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து இருந்த நிலையில் மீண்டும் காரில் வந்து ஆடு திருடும் சம்பவம் அதிகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.