நாகப்பட்டினம், ஜூன் 24: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 பயனாளிகளுக்கு ரூ.265.315 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர்ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டம், ஆதரவற்ற உதவித்தொகை திட்டம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை திட்டம், முதிர்கன்னி உதவித்தொகை திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டம், உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதல்வர் அறிவிப்பின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணையின் படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட உதவித்தொகை, தற்போது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 591 நபர்களுக்கு ரூ.74.644 கோடி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 16 நபர்களுக்கு ரூ.6.524 கோடி உதவி தொகையும், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 587 நபர்களுக்கு ரூ.41.952 கோடி உதவி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 840 நபர்களுக்கு ரூ.32.427 கோடி உதவி தொகையும், ஆதரவற்ற உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 42 ஆயிரத்து 46 நபர்களுக்கு ரூ.55.961 கோடி உதவி தொகையும், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 153 நபர்களுக்கு ரூ.5.578 கோடி உதவி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. முதிர்கன்னி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,145 நபர்களுக்கு ரூ.1.538 கோடி உதவி தொகையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 972 நபர்களுக்கு ரூ.46.691 கோடி மாதந்தோறும் உதவித்தொகை என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 பயனாளிகளுக்கு ரூ.265.315- கோடி மதிப்பீட்டில் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.