நாகப்பட்டினம்,ஆக.17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விதைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் கமல்ராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது; நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்ட கால நெல்விதை ரகங்கள் ஏடிடி 51 மற்றும் சிஆர்சப் போன்றவை நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான அரசு வேளாண்மையங்களில் இருப்பில் இல்லை. குறிப்பாக தலைஞாயிறு வட்டாரத்தில் 11 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளவிருந்த விவசாயிகள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து விவசாயிகள் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகள் முன் வைக்கபட்டிருந்த நிலையில், வேளாண்மைதுறையின் மெத்த போக்கின் காரணமாக மாவட்டத்தில் பெரிய அளவில் விதை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் இருப்பது மட்டுமில்லாமல், விதைகள் தனியாரிடம் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு விதைகள் தடையின்றி வேளாண்மையங்களில் கிடைக்க செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.