நாகப்பட்டினம்,ஆக.14: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளில் நாளை (15ம் தேதி) கிராமசபா கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் நாளை (15ம் தேதி) சுதந்திர தினத்தன்று கிராமசபா கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் வரவு-செலவு குறித்து விவாதித்தல், 2024-25ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியில் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைபடுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியம் – உயிரி பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2024-25ம் ஆண்டின் பணி தொகுப்பில் கூடுதலாக சேர்க்க வேண்டிய பணிகள், 2024-25ம் ஆண்டில் தனி நபர் சொத்து உருவாக்கும் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பயனாளிகளை உருவாக்குதல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்த விவாதங்கள் நடைபெறும். எனவே இக்கிராம சபா கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.