நாகப்பட்டினம், ஆக.17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் போன்றவற்றுக்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்த ப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மனித உயிரிழப்புகளை தடுத்திடும் வகையில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயலிழந்த இடங்களை கண்டறிதல், ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காண மாவட்டத்திற்குள் விரிவான கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதன் மூலமாக கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த போர்வெல்கள் விரிவாகப் பராமரிக்கவும் அவற்றின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திறந்தவெளி கிணறுகள் கண்டறிப்படும் பட்சத்தில் அவற்றிற்கு உயரமான உறுதியான சுற்றுச்சுவர்களை அதன் உரிமையாளர்கள் அமைத்திட வேண்டும். செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகள் விபத்துகளை தடுத்திட உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்தவதை தடுத்திடும் வகையில் கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உடனே வேலி அமைத்திட உரிமையாளர் மற்றும் குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பாக நெடுஞ்சாலைகளில், கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளை நிவர்த்தி செய்வது அவசியம். கட்டுமான இடங்களில் வலுவான தடுப்புகளை நிறுவவும், ஒளிரூட்டும் ஒட்டுவில்லைகளை ஒட்டவும், அவை சாலை பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதிபடுத்தவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க இந்த அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து மிகுந்த விழப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை அப்பகுதிக்கு விளையாட பெற்றோர் அனுமதிக்க கூடாது. தங்கள் பகுதியில் உள்ள செயலற்ற நிலையில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வேண்டும் என தெரிவித்துள்ளார்.