நாகப்பட்டினம்,மே10: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 241 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டத்தில் 148 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், கீழ்வேளூர் வட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பிலும், திருக்குவளை வட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 500 மதிப்பிலும், வேதாரண்யம் வட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலும் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, முதிர்கன்னி உதவிதொகை என மொத்தம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 500 மதிப்பில் 241 பயனாளிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல திட்டங்களை தீட்டி கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் செயல்படுத்தி வருகிறார். இதில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது பெருமைமிக்கது ஆகும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின்படி கிடைக்க பெறாதவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் முதல்வர் செயல்பட தொடங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து கூட்டுநீர் திட்டம் வழங்கவும், நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகளில் பேருந்து நிலையம், வேதாரண்யம் நகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், வேளாங்கண்ணி, அக்கரைபேட்டை இடையே மேம்பாலம் கட்ட நிதி, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் வாய்மேடு பகுதியில் தடுப்பணை, மகளிர் திட்டத்தின் கீழ் நிதி போன்றவைகளை பெற்று மாவட்டத்தை வளர்ச்சிபாதையில் அழைத்து செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ், டிஆர்ஓ ஷகிலா, நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.