நாகப்பட்டினம், ஏப். 5: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டன்ற தொகுதிகளில் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பறக்கும் படை அலுவலர் சரோஜினி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே அருள்மணிதேவன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரிடம் உரிய ஆவணங்களும் இன்றி ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 330 எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அரங்கநாதனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.