நாகப்பட்டினம்,நவ.20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு, பகலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும் விட்டு, விட்டு மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை வடியாமல் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது. அதே போல் மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத்துறை ஆழ்கடல் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கால்நடை துறை தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு: நாகப்பட்டினம் 21, திருப்பூண்டி 35, வேளாங்கண்ணி 40, திருக்குவளை 17, தலைஞாயிறு 20, வேதாரண்யம் 76, கோடியக்கரை 68 என பதிவாகியுள்ளது.