Saturday, June 10, 2023
Home » நாகத்தை பிள்ளையாய் பெற்ற நங்கை

நாகத்தை பிள்ளையாய் பெற்ற நங்கை

by kannappan
Published: Last Updated on

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சூலக்கரை கிராமத்தில் அந்தணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். தங்களது நிலங்களில் வேலை செய்யும் பொருட்டு அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தங்க இடம் கொடுத்து வேலை செய்ய வைத்தனர். இவ்வாறு இரண்டு குடும்பங்கள் குடியேறின. அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன், உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறப்புற்று இருந்தது. மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழு மாத கர்ப்பிணியாக மாரியம்மா இருந்தபோது ஒரு நாள் காலை, வயல் வெளிக்குச் சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார்.அவரது காலடி சத்தம் கேட்ட அந்த பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது.துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்று போனது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போது தான் முனீஸ்வரன் தான் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார்.குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். கணவன் இறந்த பின் மாரியம்மா தோட்ட காடுகளுக்கும். வயல்களுக்கும் வேலைக்கு சென்று வந்தாள். நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயராயிற்று. நாகம்மா கடைக்கு சென்றாலும், தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றாலும், குழந்தையைப்போல நாக குழந்தை அவள் பின்னாலே செல்லுமாம். ‘‘நான் வரும் வரைக்கும் வீட்டுல  இருக்கணும்’’ என்று நாகம்மா கட்டளை இட்டு சென்றாலும், தாயின் வருகை தாமதமானால் பதிவாக செல்லும் இடங்களுக்கு சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு வருமாம் நாக குழந்தை. இதை ஊரார்கள் நாகம்மாளிடம் உன் குழந்தை இப்பதான் தேடி வந்துச்சு என்று கூறுவார்களாம். அந்தளவுக்கு தாய் நாகம்மாள் மீது பாசம் வைத்திருந்தது நாககுழந்தை.நாகம்மா வேலைக்கு செல்லும் போது பாம்பு குழந்தையும் தாய்வேலை செய்யும் தோட்டத்தில் சென்று பாத்தியில் படுத்துக் கொள்ளுமாம். இதனால் தோட்ட உரிமையாளர்கள் உனக்கும், உன் பிள்ளைக்கும் என்று கூறி, நாகம்மாளுக்கு கூலியாக இரு மடங்கு தானியம் வழங்கி உள்ளனர். (அந்த காலத்தில் கூலியாக தானியங்கள் தான் பெருமளவில் வழங்கப்பட்டது) காய்கனிகள் காய்க்கும் தோட்டத்தில் நாகம் சென்று விட்டால். உடனே அந்த தோட்டக்காரர் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய், கனிகளில் ஒரு பகுதியை நாகம்மாவிடம் கொடுப்பதுண்டு. இதனால் நாகம்மா வீட்டில் தானிய வகைகளுக்கும், காய், கனிகளுக்கும் குறைவில்லை. அக்கம்பக்கத்தினர் இரக்கப்பட்டு வழங்கி வந்ததை, நாகம்மாளின் கணவர் வழி உறவினர்கள் இரக்கமின்றி தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் பொறாமை கொண்ட அவர்கள், குழந்தை நாகத்தை கதிர் அரிவாளால் துண்டு, துண்டாக நறுக்கி, வறட்சியால் வெடித்து நின்ற வயலில் அந்த வெடிப்பு பகுதியில் துண்டுகளை வைத்து களிமண் கொண்டு அதன் மேல் பூசிவிட்டனர்.நாகம்மாள் குழந்தை நாகத்தை தேடி வனத்திலும், வயல் வெளிகளிலும் அலைந்தாள். மூன்றாவது நாள் இரவில் நாகம்மாள் கனவில் தோன்றிய பாம்பு குழந்தை, உறவினர்கள் தன்னை நறுக்கி போட்டதையும், தன்னை புதைத்து வைத்த இடத்தையும் கூறியது.மனம் வருந்திய நாகம்மாள், மறுநாள் காலை கனவில் நாக குழந்தை கூறிய வயல் பகுதிக்கு சென்று நறுக்கி கிடந்த பாம்பு துண்டுகளை எடுத்து கற்றாழை நாரில் கோர்த்து வைத்து, கையில் ஏந்தியபடி ஊருக்குள் கொண்டு வருகிறாள். மாலை பொழுதில் ஊர் பெரியோர்கள் கூடியிருந்த ஆலமரத்தடிக்கு வருகிறாள்.ஐயா, பெரியோரே, ஆன்றோரே, சான்றோரே, தனக்கு இருந்த பிள்ளையை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எனக்கு நியாயம் சொல்ல வேண்டும் என்று கதறி அழுதாள். கூடியிருந்த பெரியோர்கள் பெற்றது பாம்பு பிள்ளை, அதை போய் பிரச்னைன்னு கொண்டு வந்து நிக்கிறியே, போம்மா, இனி எப்படி பிழைக்கலாமுன்னு பாரு, என்று பதிலுரைத்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த நாகம்மாள், தனக்கு நியாயம் கிடைக்காமல் சூலக்கரையில் யாரும் வசிக்க முடியாது என சாபமிட்டாள். வேகத்தோடும், கோபத்தோடும், தலை விரி கோலத்தோடும் அங்கிருந்து விரைந்து வந்தாள். ஊர் எல்லையில் உள்ள வீரப்பெருமாள் கோவிலுக்கு வந்து கதறி அழுது உயிரை மாய்த்தாள்.நாகம்மாள் சாபத்தை தொடர்ந்து, ஊரில் வறட்சி ஏற்பட்டது.  வீடுகள், தோட்டங்கள், வயல் வெளிகள் என எல்லா இடங்களிலும் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்தது. பாம்பு தீண்டி இறப்பு அதிகம் நேர்ந்தது. இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் அங்கிருந்த அக்ரஹாரமே தேவகோட்டைக்கு இடம் பெயர்ந்தது. ஊர் வாசிகள் ஒன்று கூடி நாகம்மாவுக்கு சிலை நிறுவி, பூஜை செய்தனர். பிரச்னைகள் ஓய்ந்தது. நாகதோஷம் விலகியது.நாகம்மாள் இறந்த இடத்தில் வீரபெருமாள் கோயில் வளாகத்தில் நாகம்மாள் சிலை உள்ளது. நாகம்மாள் கையில் பாம்பு குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். இக்கோயில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகேயுள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ளது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi