துறையூர், பிப்.26: துறையூர் அருகே நல்லியம்பாளையம் கிராமத்தில் கைலாச நாயகி உடனுறை கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நல்லியம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாச நாயகி உடனுறை கைலாசநாதர் கோயில் மகா சிவராத்திரியின் முதல் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியின் முதல் நாள் இந்த ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். நேற்று கைலாசநாயகி உடனுரை கைலாசநாதருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக இரு தெய்வங்களுக்கும் காப்புகள் கட்டப்பட்டு கைலாசநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. பின்னர் மாங்கல்யம் யாக வேள்வியில் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வேதங்கள் ஓதப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வணங்கி வழங்கிய திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் கைலாச நாதர் கையில் வைத்து கைலாச நாயகிக்கு மாங்கல்ய தாரனம் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுச் சென்றனர்.