கூடுவாஞ்சேரி: தினகரன் செய்தி எதிரொலியால் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் உள்ள மணல் திட்டுகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். வண்டலூர் அருகே கொளப்பாக்கம் அடுத்த நல்லம்பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள சாலை ஓரத்தில் மணல் திட்டு அதிக அளவில் காணப்படுகிறது. இதில் ஊனைமாஞ்சேரி மற்றும் நல்லம்பாக்கத்தில் சட்ட விரோதமாக நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகிறது. இங்கிருந்து சக்கை கற்கள், ஜல்லி கற்கள் சிப்ஸ், எம்சான்டு மற்றும் டஸ்ட் ஆகியவற்றை டிப்பர் மற்றும் ராட்சத லாரிகளில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் மற்றும் கேளம்பாக்கம் வழியாக சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இதில் கனரா வாகனங்களில் லோடுகளை ஏற்றிக்கொண்டு நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் திரும்பும்போது மணல் திட்டுகள் உருவாகி வருகிறது. இதில், மாத கணக்கில் தேங்கியிருக்கும் மணல் திட்டுகளால் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வது கூட தெரியாமல் புழுதி நிறைந்த சாலையாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பலமுறை விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் அதிக அளவில் காவு வாங்கி உள்ளன. மேலும் பேருந்துகளில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது அதிக அளவில் புழுதி பறப்பதால் கண் எரிச்சலுடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி படத்துடன் தினகரனில் கடந்த 26ம் தேதி வெளியானது. அதன் எதிரொலியாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலையில் அதிக அளவில் காணப்பட்ட மணல் திட்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது.