வருசநாடு, மே 27: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியில் மூலக்கடை, சோலைதேவன்பட்டி, உப்புத்துறை, தங்கம்மாள்புரம் வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு, உப்புத்துறை போன்ற பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் நேரடியாக இவற்றை வாங்கி லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் விலைவாசி ஏற்றத்தின் காரணமாக உற்பத்திச் செலவினம் அதிகரித்ததாலும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும் செங்கல் சூளைகள் மிகவும் நலிவடைந்து வருவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.