விருதுநகர், ஜூன் 11: நலவாரியங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 98 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.74 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியம், உடழைப்பு நலவாரியம் உள்பட 20 நலவாரியங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்கு செயல்பட்டு வருகின்றன. 20 அமைப்பு சாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 7.5.2021 முதல் 31.5.2025 வரை 20 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் 76,837 நபர்கள் புதிதாக உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 50,261 நபர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
10,471 பேருக்கு ஓய்வூதியம், 85,483 பேருக்கு கல்வி உதவித்தொகை, 1,324 பேருக்கு இயற்கை மரண நிதி உதவி, 1,348 பேருக்கு திருமணம், மகப்பேறு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 98,626 பேருக்கு ரூ.73.92 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணியிட விபத்து மரணம் அடையும் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமான தொழிலாளி வாரிசுதாரர்களுக்கு பணியிட விபத்து மரண உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது, தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கட்டுமான பணிகளின் போது உயிரிழந்த 46 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவில் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் 1.1.2021 முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 16,595 பயனாளிகளுக்கு ரூ.10.95 கோடி மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சொந்த ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.