ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 16 (பகவத் கீதை உரை)கழுகின் இயல்பு, ஆகாயத்தில் உயரே பறப்பதுதான். அந்த அளவில் அது உயர்வானதுதான். ஆனால், அதன் பார்வை எங்கே இருக்கிறது? பூமியில்தான். தனக்கு இரையான அழுகிய பிணம் எங்கே இருக்கிறது என்றுதான் அது பார்க்கிறது. வானில் பறக்கக்கூடிய உயர்வு அதற்கு இருந்தாலும், இரை என்ற ஆசை அதனை கீழே, பூமிக்கு இழுக்கிறது. இதைப்போலவே வேத சாஸ்திரங்களை எவ்வளவுதான் திறம்படக்கற்றிருந்தாலும், ஒரு வேத விற்பன்னர் ஆசாபாசங்களுக்கு அடிமையாவாரானால், அவருக்கும் கழுகுக்கும் என்ன வித்தியாசம்? எந்த அளவுக்கு மனசில் அதிகமாக சம்பாதிக்க வேண்டிய ஆசையையும், அனுபவிக்க வேண்டிய காம உணர்வையும் அவர் கொண்டிருக்கிறாரோ அந்த விகிதாசாரத்தில் அவர் இறையருளிலிருந்து விலகி நிற்கிறார்; பகவானின் பேரருளை நுகர இயலாதவராகிவிடுகிறார் என்று ஆசை பூண்ட ஆன்றோரை ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விமர்சிக்கிறார்.இப்படி எந்த விதத்திலும், எதற்காகவும் மனதில் சலனமில்லாத பக்குவத்தை அடையும் யோகியாக மனிதன் திகழ வேண்டும். அப்போது தான் அவனால் தன் கர்மங்களை முழுமையாக இயற்ற முடியும். அந்தப்பக்குவத்தை இந்தத் தருணத்தில் அர்ஜுனன் கைக்கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணன் எதிர்பார்க்கிறார். தங்களை முற்றும் கற்றவராகக் கருதிக்கொள்பவர்கள் தங்களை ஞானிகளாகவே வரித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் முற்றும் துறந்தவர்களாக ஆவதில்லை. ஞானத்தின் நிறைவான நிலை என்ன என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். கற்றல் மட்டும் ஞானமன்று; எந்த நிலையிலும் சம மனது கொள்ளும் விவேகமே ஞானமடைவதன் பூரணத்துவம்.சம மனப்பக்குவம் என்பது சாமான்யத்தில் அமைந்துவிடாதுதான். ஆனால், அதற்கான முயற்சிகளைக்கட்டாயம் மேற்கொள்ளத்தான் வேண்டும். ஞானத்தை அடைய இதுதான் பாதை. அப்படி முயற்சிக்கவில்லையென்றால், வருத்தங்களில் வேதனைப்பட்டும், மகிழ்ச்சிகளில் சந்தோஷப்பட்டும், மனம் அலைக்கழியும். பொதுவாகவே மகிழ்ச்சியைத் துய்க்க விரும்புபவர்கள் வருத்தத்தை மேற்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், வருத்தம் என்பதும் மகிழ்ச்சி என்பதும் ஒருவருக்கான இருவகை உணர்வுகள்தான். ஒன்றை அனுபவிக்கத் தயாராக இருக்கும்போது, இன்னொன்றைத் தான் பெறவேகூடாது என்று பிடிவாதம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுனநிர்த்வந்த்வோ நித்யஸத்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் (2.45)‘‘அர்ஜுனா, வேதங்கள் எல்லாம் (ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய) முக்குணமயமான சம்சாரத்தைப் பற்றித்தான் சொல்கின்றன. ஆகவே, வேதச்சொற்களை (அவை எவ்வளவுதான் அலங்காரமாக இருந்தாலும்) அவற்றில் நாட்டம் கொள்ளாதே. (சுகம்-துக்கம், நல்லது-கெட்டது, வளமை-வறுமை என்பன போன்ற) இருமைகளிலிருந்தும் விடுபட்டவனாக இரு. எப்போதும் நடுநிலையாளனாக விளங்கு. ஆத்ம சொரூபத்தில் நிலைத்திரு. அப்படி நிலைத்தால், யோக விஷயங்களிலிருந்து உன்னால் விலகியிருக்க முடியும்.’’ இந்த பிரபஞ்சத்தில் சாத்விகம், ராட்சதம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் வியாபித்திருக்கின்றன. அனைத்து வகையான சுவர்க்கங்களும் இதே பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இவற்றிலிருந்து எப்படி மகிழ்ச்சி, தனம், கீர்த்தி முதலான இன்பங்களை அடைய முடியும் என்று சொல்லும் வழிகாட்டிகளாகவே வேதங்கள் அமைந்திருக்கின்றன. அதாவது, பிரபஞ்சத்தைப்பற்றியதாகவே இருக்கின்றன. அதாவது, இந்த முக்குணங்களுக்கும் மேலான ஒரு விஷயம் இருப்பதை அவை சொல்வதில்லை. வீணான பாழ்களாகக் கருதப்படும் அந்த முக்குணங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்; இவற்றிற்கெல்லாம் மேம்பட்ட பரம்பொருளை உணர, அடைய முயற்சிக்க வேண்டும். இது எப்படி இயலும்? அது, யோக சாதனத்தைக் கைக்கொண்டால் இயலும். அதாவது, விருப்பு-வெறுப்பு முதலான இரட்டை உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். அதற்கும், இதற்குமாக ஊசலாடாதபடி மனசைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படிப் பயில்வதே யோக சாதனமாகும்.யோகம் என்றால் என்ன? லௌகீக வாழ்க்கையில் இச்சைப்பட்டுப் பொருட்களை சேகரிப்பது. ‘இன்று உங்களுக்கு யோக காலம்’ என்று ஆரூடம் சொல்லப்பட்டால், குறிப்பிட்ட நபருக்கு, அவர் விரும்பத்தக்க ஒரு பொருள் அல்லது தனம் கிடைக்கும் என்று அர்த்தமாகும். ‘அவன் யோகக்காரன்’ என்றால், ‘அவன் சுகிக்கும் அளவுக்கு லோகாயதப் பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறான்,’ என்று பொருள். இப்படி சேகரித்து வைத்திருக்கும் பொருட்களால் தனக்குக் கிடைக்கும் சுகம் நீடித்திருக்கவேண்டும், நிலைத்திருக்கவேண்டும் என்று வேட்கை கொண்டு அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குணம், க்ஷேமம் எனப்படுகிறது.இந்தப் பற்றிலிருந்து விடுபடவேண்டும். அதாவது, பொருள் சேகரிப்பதிலும், அதனைப்பாதுகாப்பதிலும் எந்த அக்கறையையும் காட்டக்கூடாது. ‘லோக க்ஷேமம் (உலக நலன்) எப்படி இருக்கிறது?’ என்ற பொதுவுடைமைக் கேள்வியை, ‘யோக க்ஷேமம் (சொத்து, சம்பத்து) எப்படி இருக்கிறது?’ என்ற சுயநலக் கேள்வியாக மாற்றிவிடக் கூடாது!உயிர் தரிப்பதற்காக காற்றைத் தேடி நாமா போகிறோம்? அது தானாக வந்து நம்மைத் தழுவி, நாசிக்குள் சென்று, நுரையீரலை நிரப்பி, இதயத்தைத் துடிக்கச் செய்யவில்லையா? இந்த உடம்பு இந்த உலகத்தில் இத்தனை நாள் உயிர் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆயுள் கணக்குப்படி, அந்தக் காற்றை நமக்காக பகவான்தானே அனுப்பி வைக்கிறார்! நாம் உயிர்வாழ அக்கறை எடுத்துக்கொண்டிருக்கும் பரம்பொருளால் நமக்கான பிற தேவைகள் என்ன என்பதும், அவற்றை நமக்கு எப்போது, எப்படி அனுப்பிவைக்க வேண்டும் என்பதும் தெரியாதா என்ன? இப்படி நம்மை தாங்கிப் பராமரிக்கத் தயாராக இருக்கும் தயாளப் பிரபுவாக அவன் விளங்கும்போது வீணாக நாம் எதற்காக அவற்றை நாடித் தேடி ஓடவேண்டும்?ஸ்ரீ ராமன் தனக்கு மறுநாள் இளவரசு பட்டாபிஷேகம் (பாரத ராஜாங்க சம்பிரதாயப்படி அரசன் உயிரோடு இருக்கும்போது அவனுடைய மகனுக்கு இளவரசுப் பட்டம்தான் சூட்டுவார்கள். தந்தையர் காலம் முடியும்வரை இளவரசன் அரச நடவடிக்கைகளை கவனித்தும், அமைச்சர் பெருமக்கள் முதலான மூத்தோர் அறிவுரைகளைக் கேட்டும் போர்க்கலைகளைப் பயின்றும் தன்னைத்தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்) என்று தன்னிடம் சொல்லப்பட்டபோது தன் முகத்தில் பிரகாசம் காட்டி னான். ஆனால், மறுநாளே ‘பட்டம் உனக்கில்லை, உன் தம்பிக்கு’ என்று அவனிடம் நேரெதிரான நிலைப்பாட்டைச் சொன்னபோதும் அதே மலர்ந்த முகத்துடன்தான் அவன் முறுவலித்தான். ‘சித்திரத்துத் தாமரைபோல்’ என்று கம்பன் ஸ்ரீ ராமனின் இந்த மனோநிலையை வர்ணிக்கிறார். அதாவது, தினகரனைப் பார்த்து இயற்கையாகப் பூக்கும் தாமரை மலர், சூரியன் மறையும்போது தானாகக் கூம்பிவிடும். ஆனால், ஓர் ஓவியமாக வரையப்பட்ட மலர்ந்த தாமரை நிரந்தரமானது. அதற்கு பகல் தெரியாது, இரவு தெரியாது. அந்த மலர்ச்சி நிலைத்திருக்கும். அதுபோன்றவன் ஸ்ரீ ராமன். அவனைப்பொறுத்தவரை இந்த இரு நிலைகளும் அவனுக்குள் திணிக்கப்பட்டவை. அவனாக விரும்பிக் கோரியவை அல்ல. அதனால்தான் பட்டாபிஷேகம் என்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமலும், இல்லை என்றபோது துன்பப்பட்டுத் துவளாமலும் அவனால் இருக்க முடிந்தது!அவரவர் தேவைக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்பப் படியளக்க ஈசன் காத்திருக்கும்போது நாம் ஏன் அதற்காக ஆலாய்ப்பறக்க வேண்டும், அல்லது அப்படி எதிர்பார்த்துக் கிடைக்காமல் போனால் அது குறித்து ஏன் விசனப்பட வேண்டும்?ஆசைக்கும், எதிர்பார்த்தலுக்கும் ஆட்படாதவனால்தான் செயலாற்ற முடியும் என்பது கிருஷ்ணனின் அறிவுரை. அதாவது, எந்தப்பலனையும் எதிர்பாராத, எந்த சூழ்நிலைக்கும் உணர்ச்சிவசப்படாத அந்தச்செயல் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். தான்ஸேன் மிகச் சிறந்த இசைக் கலைஞர். கேட்போர் மனம் நெகிழும்படி பாடுவார், ரபோப் இசைக் கருவியையும் பிறர் மயங்கும் வண்ணம் இயக்குவார். மன்னர் அக்பர் அவருடைய இசைக்கு அடிமையானவர். தன் நித்தியக் கடமைகளில்கூட ஈடுபடத் தயங்கும் மன்னர், தான் விரும்பும்போதெல்லாம் தான்ஸேனின் இசையில் அப்படியே கிறங்கிப் போவார். நேரம், காலம் கிடையாது. எப்போது அவர் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் தான்ஸேன் பாடி, அவரை மகிழ்விக்க வேண்டும்.ஆனால், அக்பருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தான்ஸேன் தானாகவே இந்த மயக்கும் இசையைப்பயின்றிருப்பாரா? இவருக்கென்று யாரேனும் குரு இருப்பார்கள்தானே? இதையே தான்ஸேனிடம் கேட்டார்: ‘‘நீ சங்கீத சிகரமாக வளர்ந்திருக்கிறாய். ஆனால், நீ சுயம்புவாக இருக்க வாய்ப்பில்லை. யாரிடமிருந்தோ கற்றுக் கொண்டுதான் உன் இசைப் புலமையை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். சொல், யார் அந்த குரு, அவரை நான் தரிசிக்க விரும்புகிறேன்.‘‘தான்ஸேன் அடக்கத்துடன் பதிலளித்தார். ‘‘மன்னரே நான் சிகரம் அல்ல, ஒரு சிறு மடுதான். நானே உயரம் என்ற அகம்பாவம் உங்களுடைய புகழுரையால் எனக்கு ஏற்படுமானால் அது என் குரு ஹரிதாஸை நான் அவமதிப்பது போலாகும். அவர்தான் சிகரம். அந்த சிகரத்துக்கு அருகே நான் ஓர் எறும்பளவுதான் இருப்பேன். அதோடு நீங்கள் சொன்னதுதான் சரி, நான் என் குருவிடமிருந்துதான் இசை பயின்றேன்…‘‘அக்பருக்கு உடனே அந்த குருவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. தான்ஸேன் இத்தனை அற்புதம் என்றால், ஹரிதாஸ் பேரற்புதமாகத்தான் இருப்பார் என்றே கருதினார் அக்பர். ‘‘ஒரு நாளில் எந்த நேரத்தில் அவர் சாதகம் செய்வார்? அப்போது நாம் போய் கேட்கலாம்,’’ என்றார். ‘‘இன்ன நேரத்துக்குதான் அவர் சாதகம் செய்வார் என்றில்லை. ஆனால், நான் கவனித்தவரை அதிகாலை 3 மணிக்கு அவர் பாடுவது வழக்கம். ‘‘அந்த நேரத்தில் அவர் பாடலைக்கேட்க வேண்டும் என்று விரும்பினார் அக்பர். தான்ஸேனையும் அழைத்துக் கொண்டு, மாறுவேடத்தில் மறுநாள் அதிகாலையில் குருவின் வீட்டின் வெளியே நின்று கொண்டார். எதிர்பார்த்தபடியே உள்ளிருந்து இசைமழை, கான வெள்ளமாகக் கரைபுரண்டோடியது. அப்படியே உருகிவிட்டார் அக்பர். பேச்செழவில்லை அவருக்கு. இத்தகைய ஒரு தெய்வீக சங்கீதத்தை அவர் கேட்டதேயில்லை. அவருடைய உணர்வுகளை அறிந்த தான்ஸேன், ‘‘நீங்கள் பெரிதும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நம்மை சந்திக்க குருநாதர் விரும்பாமல் போகலாம். ஆகவே புறப்படலாம், வாருங்கள், என்று கூறி அக்பரை அழைத்துச் சென்றார்.மனமின்றி அந்த இடத்தை விட்டகன்றார் அக்பர். இப்போது தான்ஸேனின் சங்கீதம் பற்றிய அக்பருடைய மதிப்பீடு குறைந்துவிட்டது. ஹரிதாஸே அவருடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டார். அதேசமயம், தன் மனநிலை இவ்வாறு மாறுவதற்குக்காரணம் என்ன என்று தான்ஸேனிடமே கேட்டார். தான்ஸேன் அமைதியாக பதில் சொன்னார்: ‘‘என் குருநாதர் கட்டுப்பாடற்றவர். தன்னிச்சையாகப்பாடவும், நிறுத்திக்கொள்ளவும் செய்வார். ஆனால், என் நிலை அப்படி அல்ல. நீங்கள் விரும்பும்போது நான் உங்களுக்காகப்பாட வேண்டும். ஏனென்றால் நீங்கள் எனக்கு வெகுமதி தருகிறீர்கள், உணவளித்து என்னைப்பராமரிக்கிறீர்கள். இதற்கான கைம்மாறாகத்தான் உங்கள் விருப்பத்திற்கேற்ப நான் பாடுகிறேன். ஆனால், என் குருநாதருக்கு இந்தத்தளை இல்லை. லௌகீகப் பிணைப்பு இல்லை. அவர் யாருக்காகவும், எந்தப் பலனை எதிர்பார்த்தும் பாடமாட்டார். தனக்காக மட்டுமே பாடுவார். நான் அவரிடம் சங்கீதம் கற்றது கூட அவருடைய நேரம், சௌகரியத்தை அனுசரித்துதான். அதனால்தான் அவருடைய இசை உங்கள் மனதில் நிறைந்து விட்டது, என் இசை கொஞ்சம் மதிப்பிழந்து விட்டது. கிருஷ்ணனின் அறிவுரைக்குப்பொருத்தமான உதாரணம்தான்ஹரிதாஸ்.(கீதை இசைக்கும்)பிரபு சங்கர்…