Friday, April 19, 2024
Home » நம்பிக்கை அளிக்கும் மருத்துவமனை!

நம்பிக்கை அளிக்கும் மருத்துவமனை!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்தமிழகத்திலேயே நெஞ்சக நோயாளிகளுக்காக முதன்முதலில் துவங்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை என்ற பெருமைக்குரியது சென்னையில் இயங்கி வரும் ‘அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை’. தாம்பரம் சானட்டோரியம் பகுதியின் முக்கிய அடையாளமான இம்மருத்துவமனை, எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் முதன்முதலில் நம்பிக்கை அளித்த சிறப்பு கொண்டது. மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், அதன் சிறப்பம்சங்கள் பற்றி நம்மிடம் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.‘‘தற்போது சர்வதேச அளவிலேயே சுவாச நோய்களும், நுரையீரல் புற்றுநோய் மற்றும் காசநோய்களும் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்று. ஆனால், அப்படி நோய் தாக்கம் ஏற்பட்டாலும் அதற்குரிய சிகிச்சைகளும், பிரத்யேகமான மருத்துவமனைகளும் இருப்பதை மக்கள் அறிந்துகொள்வது அவசியம். இன்று பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இயங்கி வரும் நம் மருத்துவமனையில், நுரையீரல் நோய்களுக்கு சரியான மருந்து கண்டிபிடிக்காத கால கட்டத்திலும் கூட இயற்கை மருந்துகளை வைத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்க வைத்து, அப்போதைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்துமிக்க உணவுகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தி இருக்கிறார்கள். காசநோய்களுக்கான மருந்து இன்று பரவலாக வந்த பிறகு, அதற்கான சிகிச்சைகள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதற்கேற்ப இந்த மருத்துவமனை இன்றளவும் காசநோய், நெஞ்சக நோய்களுடன் எய்ட்ஸ் நோய்க்கும் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இங்கு 1928ம் ஆண்டில் இருந்து காசநோய் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் டேவிட் சவரிமுத்து பிள்ளை என்ற தமிழர் தன்னுடைய சொந்தப் பணத்தில் தொடங்கிய மருத்துவமனை இது. அப்போது பச்சை மலை என்று அழைக்கப்பட்ட தாம்பரம் பகுதியில் 125 ஏக்கர் நிலத்தை தனிப்பட்ட முறையில் வாங்கி, காசநோய்க்கான சிறப்பான சிகிச்சை மையத்தை ஆரம்பித்தார். பின்பு பராமரிக்க முடியாததால் 1935ம் ஆண்டு தமிழக அரசிடம் இந்த மையத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக்கொண்டு ஒப்படைத்துவிட்டார். 1950க்கு பின்னர் இந்த மருத்துவமனை முழுவதுமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை என்ற பெயர் 1985ம் ஆண்டு சூட்டப்பட்டது. காலப்போக்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்ற இந்த மருத்துவமனை, தற்போது 760 படுக்கை வசதிகள் கொண்டதாக திகழ்கிறது. இந்த மருத்துவமனையில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களான ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் புற்றுநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான காசநோய் சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகிறது. அதோடு ரத்தப்பரிசோதனை மையம், சளி பரிசோதனை மையம், நுரையீரல் எண்டோஸ்கோப்பி முறை சிகிச்சை மையம், அறுவை சிகிச்சை மையம், டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் போன்றவையும் இங்கு சிறப்பாக இயங்குகிறது.இங்கு சிகிச்சை பெறுவதற்காக ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் அந்தமான் போன்ற பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அந்த அளவுக்கு காசநோயைக் குணப்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் தரக்கூடிய எல்லா வசதிகளும் உள்ளது. குறிப்பாக, காசநோய் சாதாரண மருந்துக்குக் கட்டுப்படுகிறதா அல்லது சாதாரண மருந்துக்குக் கட்டுப்படுத்த முடியாத Drug Resistence வகையா என்பதை அறிந்துகொள்ள, சிறப்பு கண்டுபிடிப்பு பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும், அதன் அடிப்படையில் தகுந்த சிகிச்சைகள் அளிப்பதற்கும் இங்கு நவீன ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மேம்படுத்துவதற்காக, சமீபத்தில் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. எனவே, இந்த ஆய்வகங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் காசநோய் வருவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து, அதற்கான மருந்து, மாத்திரைகளை இங்கேயே கொடுத்து, குணப்படுத்துவதற்கான, ஒரு மேன்மையான காசநோய் சிகிச்சை மையமாக இதை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அது மட்டுமில்லாமல் 6 கோடி ரூபாய் செலவில் புறநோயாளிகளுக்கான புதிய சிகிச்சை பிரிவைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வருட காலத்துக்குள் இப்பணியை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு இதை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உடல்நலனைப் பேணும் வகையில், ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் வகையில், அவரவர் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500ஐ நேரடியாக செலுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒருவருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்,; தங்களுடைய ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி கொடுத்தால், இத்திட்டத்தின் மூலமாக அவர்கள் பயன் பெற செய்கிறோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தேவையான சிகிச்சைகளைத் தரும் வகையில், இந்த மருத்துவமனை ஒப்பற்ற சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென்று, சிறப்பாக அமைக்கப்பட்ட பரிசோதனை மையம் உள்ளது. இந்நோயாளிகளைச் சிறப்பாக கண்காணிப்பதற்காக தரமான பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். முதன்முதல் இந்த மருத்துவமனையில்தான் எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவர்களை அரவணைத்து, பேணிப் பாதுகாத்து எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகள் இல்லாத காலகட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து பராமரித்து வருகிறது. இங்கு 25 மருத்துவர்களும், 18 பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்கள் 130, தலைமை செவிலியர்கள் 13, கடைநிலை ஊழியர்கள் 200 பேரும் இந்த மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள்.’’டாக்டர் குமார்(நிலைய மருத்துவ அதிகாரி) ;‘‘நுரையீரல் மோசமான நிலையில் பாதிக்கப்படுகிறவர்களுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. நோயாளிக்குத் தேவைப்படும் நுரையீரல் சிகிச்சை உபகரணங்கள், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு குணமடையச் செய்து நார்மல் வார்டுக்கு அனுப்பிவைக்கிறோம்.’’டாக்டர் ராஜ்மோகன் (புறநோயாளி பிரிவு பொறுப்பாளர்)‘‘ஒரு நாளைக்கு 600க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் வந்து பயன்பெறுகிறார்கள். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த புறநோயாளி பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. இங்கு வருகிற நோயாளிகளுக்கு சுவாசக்கோளாறுகள், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா தொந்தரவுகள், சுவாசிப்பதில் சிரமப்படுகிறவர்கள் போன்ற அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை, சளி பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக உள் நோயாளியாக தங்க வைக்க சிகிச்சைக்கு அனுப்பி விடுகிறோம். சாதாரண பிரச்னை உள்ளவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் தந்து குணப்படுத்துகிறோம். காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு இங்கு தரமான மருந்துகள் வழங்கப்படுகிறது.’’காயத்ரி தேவி (ஆய்வகக்கூட பொறுப்பாளர்)‘‘ரத்தப்பரிசோதனை, சளி பரிசோதனை, ஹெச்.ஐ.வி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, காசநோய் கிருமி பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை போன்றவை இலவசமாக செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 200க்கும் மேல் உள்ள நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்குள் முடிவுகள் தரப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.’’டாக்டர் விஜிலா‘‘ART எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற Anti Retroviral Therapy சென்டர்ல 2004ல் இருந்து பணியாற்றி வருகிறேன். 1994ம் ஆண்டில் இருந்து எச்.ஐ.வி நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். HIVயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 சதவீதம் காசநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்து சிகிச்சைகள் அளிக்கிறோம். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஃபர்ஸ்ட் லைன் மாத்திரை, இரண்டாம் லைன் மாத்திரை, மூன்றாம் லைன் மாத்திரை என மூன்று வகையான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் லைன் மாத்திரை மிகவும் விலையுயர்ந்தது. எனவே, Centre Of Excellence அங்கீகாரம் பெற்ற நம் மருத்துவமனையில் மட்டும்தான் இந்த மாத்திரைகள் கிடைக்கும். இந்த மூன்றாம் லைன் மாத்திரைகளை வாங்குவதற்கு பாண்டிச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். ஒரு மாதத்தில் 4 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் வந்து செல்கின்றனர். அத்தனை பேரையும் டாக்டர் கன்டிப்பாக பார்ப்பார். இதன் காரணமாக எல்லா நோயாளிகளும் எவ்வளவு தூரமாக இருந்தாலும் இங்கு வந்து செல்கின்றனர்.’’பிரேமலதா (செவிலியர்)‘‘1994ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். இங்கு தொற்று பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதை உணர்ந்து கவனமாகப் பணியாற்றுகிறோம். சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவதால் எந்த மன உறுத்தலும் இல்லை. இதற்காக 130 நர்ஸ்கள் இரவு பகல் என பணியாற்றி வருகின்றனர். மருத்துவர், செவிலியர்கள், மருந்தாளுனர், டெக்னீஷியன், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் குடும்பமாகப் பணியாற்றி வருகிறோம்.’’ ;ராஜேந்திரன் (புற நோயாளி; செங்கல்பட்டு)‘‘எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக சளி தொந்தரவுகள் இருக்கிறது. அதனால் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறேன். நல்ல முறையில் கவனித்து சிகிச்சை அளிக்கிறார்கள். கூட்ட நெரிசலும் இல்லாமல் இருப்பதால் வந்தவுடன் சீக்கிரமாக டாக்டரை பார்த்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன்.’’வாணி (புற நோயாளி ரெட்ஹில்ஸ்)‘‘எனக்கு ஒரு ஆண்டுக்கு மேல் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது. அதுவும் பனி காலங்களில் மூச்சுவிடுவதற்கே மிகவும் சிரமப்படுவேன். அதனால் இந்த மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது ஆஸ்துமா தொந்தரவுகள் இருப்பது தெரிய வந்தது. அதனால் இங்கு வந்து தொடர்ந்து இந்த சிகிச்சையை பெறுகிறேன். எனக்குத் தேவையான மருந்துகளை இந்த மருத்துவமனையில் கிடைக்கிறது.’’வசந்தா (உள்நோயாளி காஞ்சிபுரம்)‘‘எனக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் எனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள். எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் இலவசமாகவே எனக்கு எடுத்தார்கள். இந்த மருத்துவமனையில் மூன்று வேளையும் உணவு தந்துவிடுகிறார்கள். அதோடு பால், முட்டை, கஞ்சி போன்றவையும் தனியாக தருகிறார்கள். நான் வந்தபோது இருந்ததை விட இப்போது நன்றாக இருக்கிறேன்.’’மூடப்படும் மறுவாழ்வு மையம்?!மறுவாழ்வு மையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் நம்மிடம் தகவலைச் சொன்னார். ‘‘காசநோய், உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கம் இன்றும் சமூகத்தில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மறுவாழ்விற்காக, ரொட்டி தயாரித்தல், மேஜை, நாற்காலி செய்தல், தோட்டம் அமைத்தல் போன்ற கைத்தொழில்களில் பயிற்சி அளிக்க, சுமார் 20 ஏக்கர் நிலத்தில் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக, 2,3 வருடங்கள் என இருந்த சிகிச்சை காலம் மாதக்கணக்கிற்கு வந்து விட்டது. இதனால், மருத்துவமனை நிர்வாகம், மறுவாழ்வு மையத்தை மூடப்போவதாக தெரிவித்து உள்ளது. எனவே, இந்நோயாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மறுவாழ்வு மையம் நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் கவனத்துக்கு…இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறையும், லேப் டெக்னீஷியன் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் வேலைச்சுமை எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். அதேபோல இந்த மருத்துவமனையில் அனைத்தும் பழைய கட்டிடங்களாக உள்ளது. ஒரு சில கட்டிடங்கள் பழுதடைந்தும் காணப்படுகிறது. நோயாளிகளுக்கென நவீன முறையிலான படுக்கைகள் அமைக்கப்படாத சூழலும் உள்ளது. பழைய கட்டிடங்களை மாற்றி புதிய படுக்கை வசதியுடன் கட்டிடங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக, உள்நோயாளிகளுக்கான சமையல் கூடம் பாழடைந்த கட்டிடமாக இருக்கிறது. இதனால் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதனால் சமையல் கூடம் புதிதாக அமைந்தால் நன்றாக இருக்கும். உள்நோயாளிகளின் துணிகள் சலவையகம் பிரிவிலும், உள் நோயாளிகளுக்கான உணவு எடுத்துச்செல்லும் வண்டியும் இன்னும் கையில்தான் இழுத்துச் செல்கிறார்கள். அதுவும் பழுதடைந்து இருக்கிறது. இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும்.விஜயகுமார், க.இளஞ்சேரன்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi