நத்தம், ஆக. 25: நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னபள்ளபட்டி ஏழுமடை கண்மாயில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று 147 பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியிலுள்ள கூட்டில் இருந்து தேனீக்கள் திடீரென கிளம்பி பெண்களை கொட்ட துவங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து சிதறி ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் பண்ணுவார்பட்டியை சேர்ந்த சின்னம்மா, அழகு, நாச்சம்மாள், முனீஸ்வரி உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களை முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், ஒன்றிய குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ). பத்மாவதி ஆகியோர் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். மேலும் காயமடைந்த தொழிலாளர்களுக்கான பாதிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் வீடு திரும்பினர்.