நத்தம், ஜூன் 25: நத்தம் அருகேயுள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவரது மகள் கவிநயா (9), மகன் வரன் (7). நேற்று காலை பாலமுருகன் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக டூவீலரில் மூங்கில்பட்டியிலிருந்து நத்தத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். குட்டக்கருப்பு கோயில் பகுதியில் வந்த செல்லப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி (23) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், பாலமுருகனின் டூவீலர் மீது மோதியது.
இதில் பாலமுருகன், கவிநயா, வரன், துரைப்பாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக பாலமுருகன், கவிநயா, வரன் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.