நத்தம், ஆக. 30: நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1983-1984ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 40 வருடங்களுக்கு பிறகு அப்பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் 40 பேர் அமரும் வகையில் பள்ளிக்கு இருக்கைகளை வழங்கினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள துரைசாமி பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை மாநகர உதவி காவல் ஆணையராக பணிபுரியும் ராஜசேகர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்சாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.