பேரணாம்பட்டு, செப்.3: பேரணாம்பட்டு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(19), கல்லூரி மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப்பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, போலீசார் ஆம்பூரில் உள்ள தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் மகபூப்பேக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கொட்டும் மழையிலும் ஏரியில் மூழ்கிய அஜித்குமாரை தேடினர். சுமார் 4 மணிநேரம் போராடி அஜித்குமாரின் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சபாரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.