Monday, May 29, 2023
Home » நட்பே! உன் பெயர் பொய்யாமொழிப் புலவரோ?

நட்பே! உன் பெயர் பொய்யாமொழிப் புலவரோ?

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் திருவள்ளுவ நாயனாரின் பெயர் என்பது நாம் அறிந்த ஒன்று. நாம் இப்பொழுது அறியப்போகும் பொய்யாமொழிப் புலவர் தொண்டை நாட்டு துறையூரைச் சார்ந்தவர். குகபாதாசிருதர் எனும் முருகனடிமைக்கும், சக்திவேலம்மையார் என்ற குணவதிக்கும் பிறந்தவர். தற்கால நில அளவீட்டின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களே தொண்டைநாடு. செங்காட்டம் என்ற ஊருக்கு அருகிலுள்ள துறையூரே அவதாரத்தலம்.சேர நாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து. தெண்ணீர் வயல் தொண்டை நந்நாடு சான்றோருடைத்து என்ற ஒளவைத்தாயின் அருள்வாக்குக்கு ஏற்ப தொண்டையில் பிறந்த சான்றோர். தொண்டை என்பது கண்டத்தையும் குறிக்குமாதலால் திருநீலகண்டர்களாக சான்றோர்கள் அதிகம் காணப்பட்டரோ?பொய்யாமொழி-ஏன்?பொய் கலக்காத உண்மை பேசும் மொழியினை கைக்கொண்டவர் என்பது அர்த்தம். இவர் மொழி கற்கவேண்டி அருகிலுள்ள வயிரபுரம் எனும் ஊரில் ஒரு ஆசானிடம் சேர்ந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தன் வயலை இன்று காவல் காக்குமாறு கூறிவிட்டு வெளிவேலைக்குச் சென்றுவிட்டார். அக்கொல்லையில் வீற்றிருந்த சிறு காளிகோயிலில் குருந்த மரத்தடியில் உட்கார்ந்தவர் உறங்கிப்போனார். நல்ல உறக்கத்தில் தான் காவல் காக்கும் வயலில் குதிரை மேய்வதாகக் கனவு கண்டார். பதறி எழுந்த சிறுவன் குதிரை மேய்ந்தது ஆசானுக்குத் தெரிந்தால் திட்டுவாரோ எனப் பயந்து காளிசிலை முன்பு நின்று வேண்டத் தொடங்கினார்.வாய்த்த வயரபுர மா காளியம்மையே!ஆய்த்த வருகாரணி வயலில்-காய்த்த கதிரை மாளத்தின்னுள் காளியங்கனேறுங்குதிரை மாளக் கொண்டுபோ!என்று காளி முன் பாட அவளும் அருள்புரிய குதிரை மாண்டுபோனது. இச்சேதி ஆசிரியரை எட்டவே அவர் விரைந்து வந்து கண்டார். ஆகா! இது அரசனுடைய செல்லக்குதிரையே! அவருக்குத் தெரிந்தால்! எனப் பயந்துபோனார். ஆசிரியரின் பயத்தைத் தன் கண்ணால் கண்ட சிறுவன் அவ்வெண்பாவையே திரும்பப்பாடி கடைசி வரியாக ‘‘குதிரை மீளக் கொண்டுவா!’’ எனப் பாடினார். குதிரை உயிர் பெற்று ஓடியது. கண்கூடாக இச்செயலைக் கண்ட ஆசிரியர் இவன் மொழி பொய்க்கவில்லை ஆதலால் இனிமேல் பொய்யாமொழி என அழைக்கப்படுவாய் என ஆசிர்வதித்தார். பெயர்க் காரணம் இதுவே. திருமங்கையாழ்வாரின் ‘‘பைநாகப் பாயைச் சுருட்டிக்கொள்’’ ‘‘பைநாகப் பாயைச் விரித்துக்கொள்’’- வெண்பாவும் நம் நினைவில் தட்டி பிரம்மிக்க வைக்கிறது.வாழ்வில் நடத்திய அற்புதங்கள்குமரக்கடவுள் இவரை தன்மீது கவிபாடக் கூறியபோது ‘‘பெட்டையும் பாடி முட்டையும் பாடுவேனோ’’ எனக் கூறி மறுத்துவிட்டார். இவர் சந்திரவாணன் மீது கோவை பாடி மீண்டு வருகையில் நடுக்காட்டில் வேட்டுவச் சிறுவனாகத் தோன்றிய முருகப்பெருமான் வழிமறித்தார். புலவர் நடுங்கிப்போனார். ஐயா நான் வெறும் புலவன், என்னிடம் ஏதுமில்லை என்றார். ஏன் ஏதுமில்லை நீர்தான் புலவராயிற்றே! அகத்தியரைப் போல உமக்குக் கவிபாட வருமா? என்றார் முருகர். அப்பாடா! உயிருக்குப் பயமில்லை வெறும் பாட்டுத்தானே சிறுவன் கேட்கிறான் என்று தம்பி! உன் பெயரென்ன? என்றார். உடனே சிறுவனும் என் பெயர் ‘‘முட்டை’’ என்றார் பெட்டை- முட்டை என தான் கூறியதை உணராத புலவரும் ஒரு பாட்டு தந்தார். அதில் முருகப் பெருமான் பொருட்குற்றம் கண்டுபிடித்து தாமே மாற்றுப்பாடலும் தந்தனர். இவரின் கர்வம் ஒழித்ததால் பொய்யாமொழியார் சிறுவனைப் பணிந்து வணங்கி தமிழ் ஆசி பெற்றார்.திருக்கானப்பேர் காளையார்கோயில் என்றழைக்கப்பெறும் திருக்கானப்பேர் சென்ற பொழுது பிச்சை கேட்க எண்ணி ஒரு வீட்டின் கதவைத் தட்டினார் அது கூத்தாள் எனும் தாசிவீடு. மெல்லத்திறந்தது கதவு. இவர் உள் நுழைந்தபோது இவள் தாயும், பாட்டியும், பூட்டியும் குருடிகளாக இருந்தனர். இவர் மனமிரங்கி கண்வேண்டி பதிகம் பாடினார்.கூத்தாண் முகத்திலிரண்டு கூர்வேல்கள் கூத்தாடன்முத்தாண் முகத்தின் முழுநீலம்-முத்தாடன்ஆத்தான் முகத்தில் அரவணித்து மாத்தாடன்காத்தாள் முகத்தி லிரண்டம்பு. – எனப் பாடி முடித்தவுடனே அனைவரும் கண்பெற்று மகிழ்ந்தனர். இதையறிந்த அவ்வூர் தாசிகள் எழுபதுபேர் தம்முள் பொருள் கொடுத்து புலவரை பாடும்படி வேண்டினர். புலவரும் நீங்கள் காமச்சேவை புரிவதால்தான் குற்றம் குறைவாக நடக்கிறது என வாழ்த்தினார். பின்னர் பாண்டிய நாடு சென்றுவிட்டு மீண்டும் காளையார் கோயில் வந்தபோது முன்னர் நினைவு எழவே, தாசி வீட்டு கதவைத் தட்டினார். தாசிக்குத் திமிர் பிடித்தமையால் கதவு திறக்காமலேயே யாரது? என்றாள்.உடனே ‘‘புலவன் பழைய குருடி கதவைத் திறடி’’ என்றார். உள்ளிருந்த வேசியர் சுதாரிப்பதற்குள் அவர்களுக்கு மீண்டும் கண் பார்வை போயிற்று. பின்னர் திமிர் ஒழிந்த தாசிகள் மன்றாடி வேண்டிட மீண்டும் கண்பார்வை கிட்டியது.வணங்காமுடிப் பாண்டியன் மறைந்து போன தமிழ்ச்சங்கத்தை மீண்டும் உருவாக்கிட ஆசைகொண்ட புலவர் மதுரை சென்றபோது அத்தேசம் ஆண்ட வணங்கா முடியை வணங்கினார். அவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசிபோல சற்று மதியில்லாதவன். புலவரின் கோரிக்கைக்கு செவிமடுக்காத அரசன் இக்கோயிலில் 49-புலவர்களின் சிலைகள் இருக்கின்றன. அவைகளை நோக்கி நீர் பாட்டுப்பாடி, அவர்களின் தலை, கைகளை அசைக்க முடியுமா? என குதர்க்கமாகக் கேட்டான். அதனாலென்ன வேந்தே! பாடுகிறேன் என கீழ்க்கண்ட பாடலைப் பாடத் தொடங்கினார்.உங்களிலே யானொருவன் வெல்வேனோ வல்லேனோதிங்கட் குலனறியச் செய்யுங்கள்- சங்கத்துப்பாடுகின்ற முத்தமிழ்க் என்பைந் தமிழுக்கொக்குமோ?ஏட விழ்தாரே எழுவீரே!என மனமுருக, 49 புலவர் சிலைகளும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர். இந்த அதிசயத்தையும் உணராத இம்மை அரசன் மூழ்கிப்போன சங்கப் பலகையை மிதக்கவிட முடியுமோ? என மீண்டும் சவால் விடுத்தான்.சிலை தலையசைத்ததையே கவுரவிக்காத அரசன் சங்கப்பலகை மிதக்கச் செய்தால் மட்டும் சிறப்பு செய்துவிடப்போகிறானா? என நொந்தவர், என்ன ஆனாலும் நாம் பாடுவதைப் பாடிவிடுவோம் என்றெ கீழ்க்கண்ட பாடலை அருளினார்.பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்பாவேந்தர் உணடெனும் பான்மையால் என எடுத்துஒர்சீர்வேய்ந்த பாடல் தெரிந்திட சங்கப்பலகைகோவேந்தன் காணக்குளத்தில் மிதந்தது.பாடலைப் பாடி முடிக்க சங்கப் பலகை மிதந்ததும் மதிஇல்லா மன்னன் அவருக்கு உரிய கவுரவம் செய்யாது திமிர் செய்தான். இவர் தாளமாட்டா கோபமுடன் பல்லக்கேறி தன் ஊர் திரும்பினார். இதையெல்லாம் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இராணி பதறிப்போனாள். புலவர்கள் கோபம்கொண்டு சபித்தால்  நாட்டிற்கே கேடு என பயந்தாள். புலவர் செல்லும் வழிக்கு முன்பு விரைந்து சென்று அவரது பல்லக்கைச் சுமந்தாள். சற்றுநேரத்தில் இதை அறிந்த பொய்யாமொழியார் நீர் யாரம்மா? என்றார். இராணி என அறிந்ததும் உன் பணிவில் நாம் மகிழ்ந்தோம் சாபம் எதும் தரமாட்டோம் என ஆசீர்வதித்தார். இராணியும் சுபமாக நாடு திரும்பினார்.சீநக்கராயன் நட்பு‘‘ராயன்’’ எனில் உயரிய அரசு அதிகாரி என அர்த்தம். ‘‘சீநக்கர்’’, சோழ அரசனிடத்து போர்ப் படைத் தளபதி மற்றும் தலைமை அமைச்சர். பொய்யாமொழியாரின் நண்பர். தர்மவான் கர்ணனுக்கும், மகாபிரபு துரியோதனனுக்கும் இடையான நட்பு, எடுக்கவோ? கோர்க்கவோ? என பிரசித்தி பெற்றது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு வடக்கிருத்தலுக்கு இடம் வகுத்து அதேபோல் வந்திருந்து உயிர் நீத்ததால் அழியாப்புகழ் பெற்றது. இவர்களுடைய நட்பின் உயர்வை இறுதியில் காணலாம்.ஒருநாள் சீநக்க ராயர் தம் வீட்டுக் கட்டிலில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. அரச சபையிலிருந்து அழைப்பு வர ராயர் கிளம்பிப்போனார். அரசவை விருந்து உண்ட புலவருக்கு உறக்கம் தாலாட்ட அப்படியே கட்டிலில் உறங்கிப்போனார். இதையறியாது அங்கு வந்த ராயரின் மனைவி கணவர் தான் கட்டிலில் உறங்குகிறார் என எண்ணித் தானும் படுத்து உறங்கினாள். அரசு காரியம் முடிந்து திரும்பினார் இராயர். ஒரே கட்டிலில் தன் மனைவியும் புலவரும், இருக்க கண்டார். இந்நேரம் புலவர் சப்தம் கேட்டு எழுந்துவிட்டார். ராயர் சற்றும் விகல்பமில்லாது நட்பே! அவள் தூங்கி எழுந்து செல்லும்வரை நீரும் நன்கு ஓய்வெடும் என்றவர் ‘‘செல்லக் கிடமின்’’ என்றார். புலவர் விக்கித்துப்போனார். எடுக்கவோ? கோர்க்கவோ? போல படுக்கவோ? தூங்கவோ? நிலை. இந்நேரம் மனைவி எழுந்தவர் சூழலைக் கண்டு நாணமுற்று தன் அந்தப்புரம் சென்றாள். புலவரின் உள்ளத்துள் ராயர் இராஜசிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டார். நாட்கள் கழிந்தன. ராயர் போரில் வீரமரணம் அடைந்தார். துடித்துப் போனார் பொய்யாமொழியார்.அன்று நீ செல்லக் கிட யென்ற யாயிழையோடுஇன்று நீ வானுலக மேறினாய்-மன்றல்கமழ்மானொக்கும் வேல்விழியார் மாரனே? கண்டியூர்சிநக்கா! செல்லக் கிடமுன்பொரு நாள், என்னை ‘‘செல்லக் கிடமின்’’ என வாழ்த்தியவனே! இன்று நீ வானுலகம் ‘‘செல்லக் கிட’’க்கின்றாய். அழகான பதிவிரதையின் கணவனே! கண்டியூரைச் சார்ந்த சீநக்கா! என் நண்பனே! உனைப் பிரிய என் மனம் ஒப்பவில்லை. எல்லோரும் தடுத்தும் ஏற்காத புலவர், சீநக்கராயரின் சிதையிலே வீழ்ந்து தன் உயிர் மாய்த்து நட்போடு ஒன்றிணைத்துக் கொண்டார்.- ப. ஜெயக்குமார், அயப்பாக்கம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi