ராமநாதபுரம். நவ. 1: ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2023-2024 சட்டசபை அறிவிப்பு எண்:105 இன் படி ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 04.11.2023 அன்று காலை 6.00 மணியளவில் துவக்கி வைக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடைபயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை புதிய சோதனை சாவடி, காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ உள்ள வழிபாதைகள் அனைத்தும் அரசின் விதிமுறைகள்படி இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.