திருச்செங்கோடு, ஆக.2: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜோதிடர்களை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளனர்.தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் ஜோதிடம் குறித்த ஒரு விவாதம் நடந்தது. இதில், கலந்துகொண்டு பேசிய திரைப்பட நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து ஜோதிடர்களிடம் நேரடியான வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல கேள்விகளை கேட்டார். அப்போது, ஜோதிடர்களை ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜோதிடர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாரிமுத்துவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஜோதிடர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.