திருவள்ளூர், செப். 1: நடமாடும் கால்நடை மருத்துவ சேவைக்கான வாகனத்தை கலெக்டர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரால் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், நடமாடும் கால்நடை மருத்துவ திட்டத்தை 21.8.2024 அன்று துவக்கி வைத்து தமிழ்நாடு முழுவதும் 200 நடமாடும் கால்நடை மருந்தக வாகனங்களுக்கு கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 வாகனங்கள் பெறப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களின் துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வழங்கும் விதமாக ஒரு லட்சம் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் வீதம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 14 ஒன்றியம் உள்ளடங்கிய 5 நடமாடும் கால்நடை மருந்தக ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சீனிவேலன், உதவி இயக்குனர்கள் உமா, சுமதி, நிர்வாக அலுவலர்கள் அன்பழகன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.