தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை கலெக்டர், எம்பி மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்து, சாவிகளை டிரைவர்களிடம் வழங்கினர்.
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் சேவை தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, திமுக எம்பி ஆ.மணி, பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து, ஊர்தியின் சாவிகளை டிரைவர்களிடம் வழங்கினார்.
பின்னர், கலெக்டர் கூறியதாவது:
தமிழகத்தில் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும், நோக்கத்துடன் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் தமிழக முதல்வர் 200 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் சேவையை(1962) கடந்த 20ம்தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்திற்கு 6 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கவும், அப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாம்களில் கலந்துகொள்ளுதல், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும். இந்த ஆம்புலன்ஸ்கள் ஞாயிறு தவிர, பிற நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும்.
மேலும், 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்பட்சத்தில், அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சேவையை கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) இளவரசன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, உதவி இயக்குநர்கள் ஜெயந்தி, ராமகிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள், உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.