பெரம்பலூர்,ஜூன் 2: பெரம்பலூரில் “நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்” கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று 8 கி.மீ தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா அருகே, பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்” கீழ் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நடை பயிற்சியாளர்களின் நடைப்பயணத்தை நேற்று (1ம்தேதி) காலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்டக் கலெக்டர், நடைபயிற்சி மேற்கொண்டு, நடைப்பயிற்சி மேற்கொள்வதன் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவியர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியதாவது :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி கடந்த 2023 நவ.4ம்தேதி அன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், சுகாதாரத்துறையின் மூலம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று இத்திட்டத்தின் மூலம் நடைப் பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்களது சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் இவைகளை பரிசோதனை செய்து கொள்ள மருத்துவ முகாம்களும் நடத்தப் படுகிறது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று தொடங்கிய நடை பயிற்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நடை பயிற்சியானது மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா அருகில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு மைதானம் வழியாக மாவட்டக் கலெக்டரின் முகாம் அலுவலகம் வழியாக மாவட்டக் கலெக்டர் அலுவலக சுற்றுப்பாதையை அடைந்து பின்பு மாவட்டக் கலெக்டர் அலுவலக நுழைவு வளைவு வரை சென்று மீண்டும் சுற்றுப் பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி சிறுவர் பூங்காவை சென்றடைந்தது.
இது சுமார் 8 கி.மீ தொலைவு ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பொது மக்களிடையே தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களிடையே உடற் பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாட்டின்மை, உடல் உழைப்பு குறைவு ஆகியவை அதிகரித்துள்ளது. இதனால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, உடல் நலம்பெற தினசரி நடைப்பயிற்சி மேற் கொள்ள வேண்டும் என மாவட்டக் கலெக்டர் தெரிவித்தார். நடைப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு 2 இடங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவிற்கான பரிசோதனை செய்யப்பட்டது. நடை பயிற்சியின் போது ஏற்படும் வறட்சியை ஈடுசெய்யும் வகையில் 3 இடங்களில் நடைப் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட சுகாதரத் துறையின் சார்பில் குடிநீர் வழங்கப் பட்டது. இந்த நடைப் பயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கீதா, இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.