தர்மபுரி, நவ.19: கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-2024ம் ஆண்டுக்கு 3.25 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கோபாலபுரத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. மொத்தம் 2500 டன் கரும்பு அரவைத்திறன் கொண்ட இந்த ஆலையில், 4,607 கரும்பு விவசாயிகள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு அரவை பருவத்திலும், 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை நன்கு பெய்ததால், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்து, ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை, கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், கோபாலபுரம் ஒன்றிய குழு தலைவர் குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் சாந்தி கூறியதாவது: கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-2024ம் ஆண்டிற்கான அரவைக்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, சுமார் 3.25 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு, கரும்பு கொண்டு வரும் பணியில் சுமார் 200 வண்டிகள் ஈடுபட்டுள்ளன.
எனவே, அனைத்து விவசாயிகளும் ஆலைக்கு சுத்தமான கரும்பை வெட்டி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த அரவைப்பருவத்தில் 10.91 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதன் அடிப்படையில், நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன்னுக்கு ₹3349.55 வீதம் வழங்கப்படும். இது தமிழகத்திலேயே கரும்புக்கு அதிகபட்ச விலை ஆகும். தமிழக அரசு கடந்த 2022-2023 அரவைப் பருவத்தில், ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக கரும்பு டன்னுக்கு ₹195 வீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அத்தொகையானது 4607 அங்கத்தினரின் வங்கி கணக்கிற்கு அதாவது ₹712 லட்சம் நேரடியாக அனுப்பப்பட உள்ளது. மேலும், கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும் ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க தனியான இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த 2022-2023ம் ஆண்டு, அரவைக்கு 11 ஆயிரம் டன்கள் கரும்பு இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு அரவைக்கு, சுமார் 30 ஆயிரம் டன்கள் இயந்திர அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டு இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக, விவசாயிகள் நான்கரை அடி இடைவெளியில் அகல பார் முறையில், அரசின் மானியத்துடன் கூடிய நிலத்தடி சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைத்து, கரும்பு சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நடப்பு 2023-2024 நிதி ஆண்டிற்கு, பருநாற்று நடவு மற்றும் ஒரு பரு கரணை நடவுக்கு, 24 பயனாளிகளுக்கு 15.16 ஹெக்டருக்கு ₹1,57,475 மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வல்லுநர் விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்று, பருநாற்று நடவு, ஒரு பரு கரணை மற்றும் சோகை தூளாக்குதல் ஆகியவற்றுக்கு, நடப்பு 2023-2024ம் நிதி ஆண்டிற்கு 55 பயனாளிகளுக்கு 43.80 ஹெக்டருக்கு, ₹5,17,250 மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு ₹2914.60 காப்பீடு நிறுவனம் மூலம் வரும் மார்ச் 30ம் தேதிக்குள் (2024) செலுத்தி பயன்பெற அனைத்து விவசாயிகளையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வேர்புழு தாக்குதலின் தாக்கம், 473.75 ஏக்கரில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால் தாக்கம் ஏற்பட்டுள்ள வயல்களுக்கு, வெட்டு உத்தரவு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விசுவநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரராசு, வேடம்மாள், சந்திரமோகன், சரவணன், முத்துகுமார், நெப்போலியன், நகர செயலாளர் முல்லைரவி, தேசிங்குராஜன்.