திருவள்ளூர், மே 20: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (29). இவர் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் மனைவி ரஜியா காட்டூனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி மனைவி ரஜியா காட்டூனை கணவர் ஹரிஷ் கையாலும் கட்டையாலும் பலமாக தாக்கி கொலை செய்தார். இது சம்பந்தமாக தியாகராஜன் என்பவர் அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து ஹரீசை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடிய நிலையில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மனைவியை ஹரிஷ் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஹரிஷுக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து ஹரிஷ் போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.