வேலூர், ஆக.13: வேலூரில் உள்ள அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 தங்க மோதிரங்கள் திருடிய வாணியம்பாடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் ரூபாராம்(48), அடகு கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த 9ம் தேதி வந்த ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து, ரூபாராமின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்து 1 சவரன் அளவிலான 2 தங்க மோதிரங்களை திருடி உள்ளார். பின்னர் நகை டிசைன்கள் பிடிக்கவில்லை எனக்கூறி நகைகள் எதுவும் வாங்காமல் சென்றுள்ளார். இதையடுத்து கடையில் 2 மோதிரங்கள் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரூபாராம், கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடைக்கு வந்தவர் 2 மோதிரங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் ரூபாராம் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் நகை திருடியவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திருப்பதி(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.